கொரோனா நோயாளிகளுக்காக அம்மா கிச்சனில் சமையல் பணியில் ஈடுபட்ட அமைச்சர்


கொரோனா நோயாளிகளுக்காக அம்மா கிச்சனில் சமையல் பணியில் ஈடுபட்ட அமைச்சர்
x
தினத்தந்தி 25 Oct 2020 12:30 PM GMT (Updated: 25 Oct 2020 12:26 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்காக அம்மா கிச்சனில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமையல் பணியில் ஈடுபட்டார்.

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதித்த நோயாளிகளுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆலோசனைபடி ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிடபுள் டிரஸ்டு சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியில் அம்மா கிச்சன் மூலம் தினமும் 5 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என தினமும் ஆயிரக்கணக்கான பேருக்கு அம்மா கிச்சன் மூலம் சமையல் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மா கிச்சனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் வந்தார். அப்போது அவரே நோயாளிகளுக்காக வெண் பொங்கல், சாம்பார், தோசை, இட்லி போன்ற உணவுகளை சமையல் கலைஞர்கள் தெரிவிக்க அவர் கையால் சமைத்து அங்குள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த தொற்று நோயால் வல்லரசு நாடுகளே மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த தொற்று நோய் தொற்று உள்ளவர்களுக்கு உணவே மருந்து என்று மருத்துவர்கள் ஆலோசனைப்படி நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மிளகு, பூண்டு, வெங்காயம், சுக்கு இப்படிப்பட்ட பல்வேறு உணவுப் பொருளை கொண்டு ஆரோக்கியமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் அன்னதானம் அளிப்பதே மிகப்பெரிய சவாலான காரியம். ஆனால் கடந்த 114 நாட்களை கடந்து அம்மா கிச்சனில் மூலம் தொற்று நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் இந்த நோய்த்தொற்று 4 சதவீதமாக இருந்தது. அதன் பின் 20 சதவீதமாக உயர்ந்தது. உடனே முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலால் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு தற்போது 2.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த நோய் தடுப்பு பணியில் அம்மா கிச்சன் பணி தமிழகத்திற்கு முன் உதாரணமாக திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் தெரிவித்தது எங்களுக்கு மேலும் உந்துதலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற மக்கள் பணியில் இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மா சாரிடபுள் டிரஸ்டு செயலாளர் பிரியதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் மீனாள், போஸ், தனலட்சுமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story