தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 123 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 123 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோக்கர்ஸ் வளவன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அன்பரசு, தொகுதி செயலாளர் மைதீன் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மனு தர்ம நூலை தடை செய்ய வேண்டும். தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் விரைந்து சென்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
வேடசந்தூரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் பாவேந்தன், ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் வீரத்தமிழன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் பா.ஜ.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 17 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுதர்ம நூலை தடைசெய்ய வலியுறுத்தி நிலக்கோட்டை போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளரும், முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவருமான தமிழரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் போதுராசன், அன்புச்செல்வன் நிலக்கோட்டை நகர செயலாளர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 30 பேரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் தலைமையில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் திருவளவன், மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் தங்கராசு, மாவட்டசெய்தி தொடர்பாளர் பொதினி வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, இந்து மத நூலான மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அதை தடை செய்ய வேண்டும் என்று கோஷங் களை எழுப்பினர். அப்போது திடீரென மனுதர்ம நூலின் நகலை தீயிட்டு கொளுத்த முயன்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story