இலங்கையில் இருந்து ரூ.2½ லட்சம் கொடுத்து கள்ளத்தோணியில் காங்கேயம் வந்த வாலிபர் கைது


இலங்கையில் இருந்து ரூ.2½ லட்சம் கொடுத்து கள்ளத்தோணியில் காங்கேயம் வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2020 3:15 PM GMT (Updated: 25 Oct 2020 3:11 PM GMT)

இலங்கையில் இருந்து ரூ.2½ லட்சம் கொடுத்து கள்ளத்தோணியில் காங்கேயம் வந்த இலங்கை வாலிபர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காங்கேயம்,

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் தமிழகம் வந்ததாக தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலின் பேரில் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக அந்த வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் அந்த வாலிபர் தங்கி இருப்பதாக ஈரோடு கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு கியூ பிரிவு போலீசார் காங்கேயம் பகுதியில் அந்த நபரை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். அப்போது அந்த நபர் காங்கேயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு நூல் மில்லில் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘அவர் இலங்கையில் உள்ள கிளிநொச்சி உதயா நகரை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் தசிகுமார் (வயது 36) என்பதும், கடந்த 17-ந் தேதி இலங்கையில் இருந்து ரூ.2½ லட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வழியாக தமிழகம் வந்ததும், தெரியவந்தது.

மேலும் விசாரணையில், தசிகுமார் காங்கேயத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் பெயிண்டு அடிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் நண்பருடன் தங்கி இருந்ததையும், அவர் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் இருப்பதையும்,’ போலீசார் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து தசிகுமாரை போலீசார் நேற்று கைது செய்ததுடன், அவரிடம் இருந்த இலங்கை தேசிய அடையாள அட்டையையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட தசிகுமாரை காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைப்பதற்காக தசிகுமாரை போலீசார் பலத்தபாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Next Story