கூடலூர், மசினகுடியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வருமானமின்றி தவிக்கும் ஜீப் டிரைவர்கள்
கூடலூர், மசினகுடியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் ஜீப் டிரைவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
கூடலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வர அனுமதிக்கப்படுகிறது. ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் இடையே நீலகிரிக்கு வர போதிய ஆர்வம் எழவில்லை. இதனால் முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி மசினகுடி, மாவனல்லா, செம்மநத்தம், மாயார் மற்றும் கூடலூர் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் தங்கும் விடுதிகள் களைகட்டியது. மேலும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரி தொழிலும் நன்கு நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 7 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வராததால் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. மேலும் வாகன சவாரி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு, தனியார் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் போதியளவு வராததால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உணவகங்கள், தங்கும் விடுதிகள், வாகன சவாரி தொழில்கள் முடங்கி உள்ளது. இதை நம்பி உள்ள தொழிலாளர்கள், டிரைவர்கள், உரிமையாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக வாகன சவாரி டிரைவர்கள் ஆயுத பூஜையை கொண்டாட முடியாத சூழலில் உள்ளனர். கடந்த 7 மாதங்களாக வருவாய் இல்லாமல் வறுமையில் இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். இதுகுறித்து வாடகை ஜீப் டிரைவர்கள் கூறியதாவது:-
ஊரடங்கு தொடங்கிய காலத்தில் இருந்து சவாரிக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் உள்ளது. தற்போது தளர்வுகள் அளித்தாலும் தொடர் விடுமுறை காலத்தில் கூட சுற்றுலா பயணிகள் வருவது இல்லை. தினமும் சவாரி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாகனத்தை வீட்டில் இருந்து எடுத்து வந்து சாலையோரம் நிறுத்தி வைக்கிறோம். ஆனால் சவாரி கிடைக்காமல் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆயுத பூஜையை கூட கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
Related Tags :
Next Story