தொல்.திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி சேலம், சங்ககிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


தொல்.திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி சேலம், சங்ககிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2020 5:43 AM IST (Updated: 26 Oct 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

தொல்.திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி சேலம், சங்ககிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் 52 பேர் கைது.

சேலம், 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலத்தில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருந்த போதிலும் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பெண்களை பற்றி தவறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொல்.திருமாவளவன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணியை சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் சின்னசாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story