கோவை வனப்பகுதியில் மயங்கி கிடந்த கரடி சிகிச்சை பலனின்றி சாவு


கோவை வனப்பகுதியில் மயங்கி கிடந்த கரடி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 26 Oct 2020 2:59 AM GMT (Updated: 26 Oct 2020 2:59 AM GMT)

கோவை வனப்பகுதியில் மயங்கி கிடந்த கரடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பேரூர்,

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட மங்கலப்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள தனியார் விவசாய நிலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் 15 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி மயங்கிய நிலையில் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு மதுக்கரை வனச்சரசகர் சீனிவாசன், போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி மற்றும் வனவர் குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்றனர். பின்னர் வனத்துறை டாக்டர் சுகுமார் வரவழைக்கப்பட்டு கரடிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சாவு

அப்போது கரடியின் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு, பின்பக்க கால்கள் செயலிழந்து இருந்தது தெரியவந்தது. மேலும் பற்கள் இல்லாததால் உணவு சாப்பிட முடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டது. பின்னர் கரடியை சாடிவயலில் உள்ள யானைகள் முகாமுக்கு கூண்டில் அடைத்து வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அந்த கரடி பரிதாபமாக இறந்தது. இறந்த கரடியின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினர் வனப்பகுதியில் புதைத்தனர்.

Next Story