கோவை மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


கோவை மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2020 3:18 AM GMT (Updated: 26 Oct 2020 3:18 AM GMT)

கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.

கோவை,

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கோவை மாவட்ட முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளான உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பால பணி, கோவை -திருச்சி பிராதான சாலையில் ஸ்டாக் எக்சேன்சில் இருந்து ரெயின்போ வரையிலான மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1 கி.மீ நீள உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானிய விலையில் வீடுகள்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி குளக்கரையை அழகுபடுத்துதல், ரேஸ்கோர்சில் சிந்தடிக் நடைபாதை, உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி, பில்லூர் 3-ம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 605 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 16 லட்சத்து 57 ஆயிரத்து 231 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதன் தொடர்ந்து மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் தினசரி மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் எந்திரங்கள், மின்மோட்டார்கள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்பு குழுக்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தாலுகாதோறும் துணை கலெக்டர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு உடனடியாக உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story