முதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வனவிலங்குகள் ஓவியம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சாலையோரம் ஓவியங்கள் வரைந்து வனவிலங்குகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி, சிங்காரா உள்பட பல வனச்சரகங்கள் உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் சாலையாக திகழ்கிறது.
இதேபோல் கூடலூரில் இருந்து முதுமலை தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதனால் ஏராளமான சரக்கு லாரிகள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் புலிகள் காப்பகம் வழியாக இயக்கப்படுகிறது.
மேலும் வனவிலங்குகளும் காப்பகங்கள் வழியாகச் செல்லும் சாலைகளை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள்
இதை தடுக்க வன விலங்குகள் சாலையை கடக்கும் இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வெயில் மற்றும் மழையில் நனைந்தது தெளிவு இல்லாமல் காணப்பட்டது.
தற்போது கூடலூர் பகுதியில் பருவ மழை குறைந்து காணப்படுகிறது.
இதேபோல் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் முதுமலைக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தடைகள் விலக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விழிப்புணர்வு
இதையொட்டி பராமரிப்பு இன்றி காணப்பட்ட விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகளை புதுப்பித்தல் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக (வரவேற்பு) வனச்சரகர் விஜயன் கூறும்போது, புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் அறிவிப்பு, விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகள் ஏராளமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்மழை உள்பட பல கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் விழிப்புணர்வு பலகைகள் தெளிவு இன்றி காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன விலங்குகள் குறித்து ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story