வேலூரில் மூதாட்டி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த மூதாட்டி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
வேலூர்,
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உள்பட 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-
வேலூர் விருபாட்சிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 73) . இவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த 19-ந் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று பரசுராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிறிதுநேரத்தில் அவர் பலனின்றி உயிரிழந்தார்.
4 பேர் பலி
வேலூரை அடுத்த சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி. இவருடைய மனைவி அன்னபூரணி (66)கடந்த 8-ந் தேதியும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா வடகதப்பள்ளியை சேர்ந்த நாதமுனி (70) கடந்த 11-ந் தேதியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேலுசின்னப்பன் (72) கடந்த 7-ந் தேதியும் கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 3 பேரின் உடல்நிலையை கண்காணித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று 3 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.
இது குறித்து வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 4 பேரின் உடல்களும் முழு பாதுகாப்புடன் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story