ஒடுகத்தூர் அருகே வெல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல் 2 பேர் கைது


ஒடுகத்தூர் அருகே வெல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2020 6:18 AM GMT (Updated: 26 Oct 2020 6:18 AM GMT)

ஒடுகத்தூர் அருகே வெல்டிங் கடை உரிமையாளரை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அணைக்கட்டு, 

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த கீரக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமால். அவருடைய மகன் குணசேகர் (வயது 35), இவர், ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வெல்டிங் கடை நடத்தி வருகிறார். அவரிடம் ஒடுகத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த ஜெயசீலன்(45) இரும்பு கதவு (கேட்) செய்வதற்காக ஆர்டர் கொடுத்திருந்தார். இதற்காக முன் பணமாக ரூ.10 ஆயிரமும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் ‘கேட்’ வேலை முடிந்து விட்டது, எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் கேட்டை எடுத்துச்செல்ல கடைக்கு வந்துள்ளார். அப்போது குணசேகரன், ஜெயசீலனிடம் மீதி ரூ.18 ஆயிரத்தை கொடுத்துவிட்டு கேட்டை எடுத்துச் செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜெயசீலனின் உறவினர்கள் 5 பேர் அங்கு சென்று அவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதனால் குணசேகரன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

2 பேர் கைது

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் யாரையும் கைது செய்யாததால் ஆத்திரமடைந்த குணசேகரின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு வந்து அவர்களை கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அந்த வழியாக ஜெயசீலன் காரில் செல்வதை பார்த்த குணசேகரின் உறவினர்கள் காரை பின்தொடர்ந்து சென்று ஒடுகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காரை மடக்கி அவரை தாக்க முயன்றனர். உடனே போலீசார் அவரை பாதுகாப்பாக போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கைது செய்தனர். மேலும் அவரது உறவினரான சூர்யா (28) என்பவரையும் கைது செய்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மூர்த்தி மகன்கள் முத்து, இளையராஜா மற்றும் அன்பு மகன் அருள் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story