வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து 1-ந்தேதி முதல் டிராக்டர் பேரணி - அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் தகவல்


வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து 1-ந்தேதி முதல் டிராக்டர் பேரணி - அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2020 4:30 AM IST (Updated: 26 Oct 2020 10:54 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் சிட்டி டவரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் சஞ்சய்தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓர் அணியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக இன்று நாடு முழுவதும் கையெழுத்து பிரசார இயக்கம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நவம்பர் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையில் டிராக்டர் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

மேலும், அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் தொந்தரவுகள் ஆகியவற்றை தடுத்திட வலியுறுத்தியும், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் நவம்பர் 5-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிரான பல திருத்தங்களை கொண்டு வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்காது. பா.ஜனதா கட்சியில் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் தொடர்ந்து இணைந்து வருவது புதிதல்ல. ஏனெனில் தங்களை குற்ற வழக்குகளில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக ஆளும் பா.ஜனதாவில் சேருகின்றனர். தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. மத்திய அரசின் கைக்குள் செயல்படும் கருவியாக சி.பி.ஐ செயல்படுகிறது. இதற்கெல்லாம் தக்க பதிலடியை மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், அருள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story