திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு: பா.ம.க. பிரமுகர் கைதை கண்டித்து சூளகிரி போலீஸ் நிலையம் முற்றுகை
திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பரப்பியதாக பா.ம.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அதை கண்டித்து போலீஸ் நிலையத்தை பா.ம.க. தொண்டர்கள் முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா துப்புகானப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற வேங்கை வளவன் (வயது 41). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான இவர் சூளகிரி போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
இதில், சூளகிரி பீரேபாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜ் (43) என்பவர், எங்கள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் படத்தை அவதூறாக பயன்படுத்தி சில வாசகங்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜை நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதை அறிந்த பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வக்கீல் இளங்கோ தலைமையில் தொண்டர்கள் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அங்கு அவர்கள் கைதான தியாகராஜை ஜாமீனில் விடுதலை செய்ய கேட்ட போது போலீசார் மறுத்தனர்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசி உள்ளார், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பா.ம.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனால் பா.ம.க.வினர் போலீஸ் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் மஞ்சு, ஆட்டோ டிரைவர் முனியப்பன் ஆகியோர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நேற்று முன்தினம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story