நாய் குரைத்த தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை - முதியவர் கைது


நாய் குரைத்த தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை - முதியவர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2020 6:52 AM IST (Updated: 27 Oct 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

நாய் குரைத்த தகராறில் பெயிண்டரை குத்திக் கொலை செய்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை கருவடிக்குப்பம் கங்கையம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் பிரதாப் (வயது 21). இவர் பெயிண்டர் மற்றும் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர் தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் பிரதாப் தனது நண்பர்களுடன் தெருவில் சென்றபோது அவர்களை பார்த்து விநாயகம் வளர்த்து வந்த நாய்கள் குரைத்தன. இதனால் ஆத்திரமடைந்த பிரதாப் நாய்களை கற்களை வீசி தாக்கியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த விநாயகம், கல்லால் நாய்களை தாக்கியது ஏன்? என்று கேட்டபோது இருவரும் வாய் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கையில் வைத்து இருந்த சிறிய கத்தியால் பிரதாப்பை விநாயகம் குத்தினார். இதில் அவருக்கு நெஞ்சில் குத்து விழுந்தது. இதை கவனிக்காமல் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட பிரதாப் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை அவரது நண்பர்கள் அங்கிருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரதாப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பிரதாப்பின் தந்தை முத்துகிருஷ்ணன் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதுங்கி இருந்த விநாயகத்தையும் கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாய் குரைத்த தகராறில் பெயிண்டரை முதியவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் லாஸ்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story