சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்


சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2020 8:08 AM IST (Updated: 27 Oct 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே குரால் கிராமம், மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முதுமை, விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு யாராவது இறந்தால் அவர்களின் உடலை ஆட்டுப்பண்ணை அருகே செல்லும் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்லும் வழியில் சுமார் 40 மீட்டர் தூரத்துக்கு தனிநபர் பட்டா பெற்று நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார். இதனால் இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்ல முடியாத நிலை உருவானது.

நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போன சின்னப்பன்(வயது 88) என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக பட்டா நிலத்தின் வழியாக கொண்டு செல்ல முயன்றபோது நிலத்தின் உரிமையாளர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதை அறிந்த சின்ன சேலம் தாசில்தார் வளர்மதி, வருவாய் ஆய்வாளர் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி, கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்தவரின் உடலை மாற்றுப்பாதை வழியாக ஆட்டுப்பண்ணை வழியாக எடுத்து சென்று அடக்கம் செய்யும்படி அதிகாரிகள் கூறினார்கள்.

உறவினர்கள் மறுப்பு

ஆனால் இதை ஏற்க மறுத்த கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதை வழியாகத்தான் செல்வோம் இல்லை என்றால் பிணத்தை எடுத்துச் செல்ல முடியாது என கூறி இறந்தவரின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story