ஆயுதபூஜைக்கு விற்பனையாகாததால் சாலையில் வீசப்பட்ட வாழை மரக்கன்றுகள் வியாபாரிகள் விரக்தி
ஆயுதபூஜைக்கு வாழை மரக்கன்றுகள் விற்பனையாகாததால் வியாபாரிகள் விரக்தியடைந்து அவற்றை சாலையில் வீசி சென்றனர்.
தேனி,
ஆயுதபூஜை பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக தேனியில் சாலையோரம் பூஜை பொருட்கள் விற்பனை செய்யவும், பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள், வாழை மரக்கன்றுகளை விற்பனை செய்யவும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆயுதபூஜை பண்டிகையில் வாழை மரக்கன்று முக்கிய பங்கு வகிக்கிறது. வணிக நிறுவனங்களிலும், வாகனங்களிலும் வாழை மரக்கன்றுகளை கட்டுவது வழக்கம்.
சாலையில் வீசப்பட்டது
ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவுக்கு வாழை மரக்கன்றுகள் விற்பனை ஆகவில்லை. இதனால் வியாபாரிகள் விரக்தியடைந்து ஏராளமான வாழை மரக்கன்றுகளை சாலையில் வீசி சென்றனர். தேனியில் கம்பம் சாலை, மதுரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாழை மரக்கன்றுகள் குவிந்து கிடந்தன. சில இடங்களில் அவற்றை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் அப்புறப்படுத்தப் படாமல் கிடந்தன.
இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் விற்பனை ஆகாமல் வீணாக சாலையில் கிடந்த மரக்கன்றுகளை வேதனையுடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story