3 நாள் தொடர் விடுமுறையால் ஏலகிரிமலைக்கு அதிகளவில் வந்த சுற்றுலா பயணிகள்
ஆயுதபூஜையையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறையால் ஏலகிரிமலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அதில் இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலை, ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அங்கு, எப்பொதும் ஒரே சம சீதோஷ்ண நிலை காணப்படும். அங்கு, செயற்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், முருகன் கோவில் உள்பட பல்வேறு இடங்களை பார்த்து ரசிக்கலாம்.
இயற்கையை ரசிக்கும் வகையிலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் 6 மாதங்களாக ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏலகிரிமலை போலீஸ் நிலையம் சார்பில் மலையடிவாரத்தில் வாகனச் சோதனை சாவடி அமைத்து இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே ஏலகிரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காதல் ஜோடிகள்
நேற்று காலை ஏலகிரிமலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வாகனச் சோதனை சாவடியில் இ-பாஸ் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே ஏலகிரிமலைக்கு செல்ல அனுமதித்தனர். இ-பாஸ் இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் ஆயுதபூஜையையொட்டி சனிக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு அதிகளவில் வந்தனர். அதில் ஏலகிரிமலையை சுற்றி பார்க்க இ-பாஸ் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். உள்ளூர் மக்கள், ஏலகிரி மலைவாழ் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கோரிக்கை
இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கில் நாளுக்கு நாள் சில தளர்வை அறிவித்து வரும் தமிழக அரசு ஏலகிரிமலையைச் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்து ஏலகிரி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story