அசாம் விபத்தில் மரணம் ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் சொந்த ஊரான காஞ்சீபுரத்தில் நடந்தது
அசாமில் நடைபெற்ற விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை,
அசாம் மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த டிரக்கில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் பலர் காயமுற்றனர். இதில் காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள செம்பரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் (வயது 45) பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர், கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்தார். அவருக்கு குமாரி (35) என்ற மனைவியும், ஆதித்யா (16) என்ற மகனும், ஜெனி (14) என்ற மகளும் உள்ளனர்.
பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அவர் அசாமில் நடைபெற்ற விபத்தில் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் அசாம் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னையில் இருந்து ராணுவ பீரங்கி வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு நேற்று காலை 8 மணி அளவில் சொந்த கிராமத்தை வந்தடைந்தது. தேசியகொடி போர்த்தி கொண்டுவரப்பட்ட அவரது உடலை பார்த்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
ராணுவ மரியாதையுடன் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மரியாதை அளித்தனர். தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ராணுவ வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் மாவட்ட நிர்வாகம் சார்பாக மரியாதை செய்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஏகாம்பரம் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story