நவராத்திரியின் சிகர நிகழ்ச்சி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா


நவராத்திரியின் சிகர நிகழ்ச்சி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா
x
தினத்தந்தி 27 Oct 2020 6:02 AM GMT (Updated: 27 Oct 2020 6:02 AM GMT)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10-வது நாளான நேற்று நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வில், அம்பு மற்றும் வாள் போன்றவை கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த உற்சவ அம்பாள் முன்பு பூஜையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அம்மன் வேட்டைக்கு செல்லும் குதிரையை கொலு மண்டபத்துக்கு எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்து அந்த குதிரைக்கு உணவாக காணம் மற்றும் கொள்ளு படைக்கப்பட்டு இருந்தது. இரவு கல்வி இலாகாவை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

பரிவேட்டை ஊர்வலம்

பரிவேட்டை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம் ஆகிய 8 வாசனை திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது அம்மனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வாகனத்துக்கு முன்னால் கோவில் பொருளாளர் ரமேஷ் வாள் ஏந்தியபடியும் பரம்பரை தர்மகர்த்தா குமரேசன் வில், அம்பு ஏந்தியபடியும் சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதிதெரு, பழையபஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பு, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், 4 வழிசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது.

பானாசுரன் வதம்

அதன்பிறகு அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர். பின்னர் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையைநோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு தென்னை இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த தென்னை இளநீரை கோவில் ஊழியர் குமரியப்பன் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பானாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

பரிவேட்டை நடந்தபோது அதிர்வேட்டுகளும் வாணவேடிக்கையும் நடந்தது. பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் அம்மன் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீதசந்தான கோபாலகிருஷ்ண சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது.

ஆறாட்டு

பின்னர் அம்மன் மீண்டும் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். இரவு கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர்குழு உறுப்பினர்கள் அழகேசன், பாக்கியலட்சுமி, சதாசிவம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவராமச்சந்திரன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித்தங்கம், குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி தொழில் பிரிவு செயலாளர் சுபாஷ், மாவட்ட பா. ஜனதா பொருளாளர் முத்துராமன், தென்தாமரைகுளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், கன்னியாகுமரி பகவதிஅம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், பொருளாளர் நாதன், கலப்பைமக்கள் இயக்க சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், தொழில் அதிபர்கள் கோபி, சந்திரன், கோபாலகிருஷ்ணன், நயினார்குமார், நோக்கியா பாலகிருஷ்ணன், சிவலிங்கம், பாலன், எஸ்.சி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் முருகேசன், கார்த்திக், கொட்டாரம் ராமர்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன், தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ரோகிணி அய்யப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் தாமரைபாரதி, காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்த அனுமதிக்கப்படவில்லை. அம்மன் ஊர்வலமாக சென்ற பாதையில் வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம்

பரிவேட்டை திருவிழாவை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கினால் பரிவேட்டை நடந்த இடத்தில் திருவிழா கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதேபோல் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேகம், மதியம் உச்ச கால தீபாராதனை, மாலையில் கொலு தீபாராதனை, இரவு சகஸ்ர நாமம் போன்றவை நடந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று பரிவேட்டை திருவிழா நடந்தது. முன்னுதித்த நங்கை அம்மன் தட்டு வாகனத்தில் எழுந்தருளச் செய்து கோவில் வெளிப்புறத்தில் பரிவேட்டை திருவிழா நடந்தது. இந்த திருவிழா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுபடி எளிமையான முறையில் நடந்தது. இதில் குறைவான பக்தர்களே கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

Next Story