ஈரோடு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் எம்.எல்.ஏ. பேட்டி


ஈரோடு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2020 6:12 AM GMT (Updated: 2020-10-27T11:42:41+05:30)

ஈரோடு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் என்று கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு, 


ஈரோடு மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கும் வகையில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டுவர அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி அளவிலான திட்ட பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று, நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக தற்போது குடிநீர் பம்ப் செய்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு சூரியம்பாளையம் மற்றும் இதரபகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டப்பட்ட அனைத்து பணிகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

முதல் -அமைச்சர்

கொரோனா வைரஸ் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதால் பணியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அன்றாட வாழ்க்கை முறைகள் நடைபெற்று வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர். எனவே அனைத்து பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இதேபோன்று ஈரோடு வெளிவட்ட சாலை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த 2 திட்டங்களையும், முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் மேடு வரை ரூ.300 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியையும் முதல் -அமைச்சர் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story