சுடுகாட்டில் தகனம் செய்ய அனுமதி மறுப்பு: முதியவர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்
பேராவூரணி அருகே சுடுகாட்டில் தகனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் இறந்த முதியவரின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலத்தை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 69). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடலை பேராவூரணி அருகே வலையன்குளம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
ஆனால் வலையன்குளம் சுடுகாடு குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமானது என கூறி, செல்லதுரை உடலை அங்கு தகனம் செய்ய ஒரு தரப்பினர் அனுமதி மறுத்தனர். ஆனால் அந்த சுடுகாடு அனைத்து சமூகத்தினருக்கும் சொந்தமானது என மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதனால் செங்கமங்கலம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இறந்த முதியவரின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் உடலுடன் பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுப்பிரமணியன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அண்ணாதுரை, சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடல் தகனம்
இதையடுத்து வலையன்குளம் சுடுகாட்டில் செல்லத்துரை உடலை தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story