கூடங்குளம் அருகே போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர் மீது வழக்கு


கூடங்குளம் அருகே போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Oct 2020 10:41 PM GMT (Updated: 27 Oct 2020 10:41 PM GMT)

கூடங்குளம் அருகே போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டு வேலைக்கு சென்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம், 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை மகன் சுமன் (வயது 43). இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமன் அங்கிருந்தபடியே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

இதுதொடர்பாக விசாரிப்பதற்காக கூடங்குளம் போலீசார் இடிந்தகரைக்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், சுமன் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடைய பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றதும், மேலும் சதீஷ்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சாலை விபத்தில் இறந்து போனதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சுமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் சுமன் வெளிநாடு சென்றது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story