மத்திய மந்திரிக்கு கொரோனா: நடிகை பாயல் கோஷ் தனிமைப்படுத்தி கொண்டார்
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து, அவருடன் கட்சியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட நடிகை பாயல் கோஷ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
மும்பை,
பிரபல சினிமா இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது கற்பழிப்பு புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்தி நடிகை பாயல் கோஷ். ஆனால் அனுராக் காஷ்யப் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், மத்திய சமூக நீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, நடிகை பாயல் கோசை கவர்னர் மாளிகைக்கு அழைத்து கொண்டு கவர்னரிடம் முறையிட செய்தார். இதையடுத்து அனுராக் காஷ்யப் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பாயல் கோஷ் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் அவர் இணைந்தபோது இருவரும் முக கவசம் இன்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
பரிசோதனை
இந்தநிலையில் ராம்தாஸ் அத்வாலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் நடிகை பாயஸ் கோஷ் மற்றும் விழாவில் ராம்தாஸ் அத்வாலேயுடன் நெருக்கமாக நின்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர். குறிப்பாக நடிகை பாயல் கோஷ் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.
இதுகுறித்து அவர், கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வரும் வரை தன்னை தனிமைப்படுத்தி கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் தனக்கு கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story