மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி


மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 28 Oct 2020 1:48 AM GMT (Updated: 2020-10-28T07:18:40+05:30)

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மும்பை,

பிரதமர் மோடி மந்திரி சபையில் சமூக நீதித்துறை இணை மந்திரியாக பதவி வகிப்பவர் ராம்தாஸ் அத்வாலே. மும்பையை சேர்ந்த இவர், இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவராக உள்ளார். ராம்தாஸ் அத்வாலேக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

60 வயதான ராம்தாஸ் அத்வாலேக்கு நீரிழிவு நோய் உள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்சியில் இணைப்பு விழா

பிரபல சினிமா இயக்குனரும், தமிழ் திரைப்பட வில்லன் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது கற்பழிப்பு புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தி நடிகை பாயல் கோஷ் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார்.

அப்போது ராம்தாஸ் அத்வாலேயும், நடிகை பாயல் கோசும் முக கசவசத்தை கழற்றிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அவர்களை சுற்றி பலர் நின்று கொண்டு இருந்தனர். மேலும் ராம்தாஸ் அத்வாலே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார். இந்த நிலையில் மறுநாளே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் சீன தூதரகம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ‘கோ கொரானா கோ’ கோஷம் எழுப்பியது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மத்திய மந்திரிகள்

ஏற்கனவே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகலாத் சிங் பட்டேல், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் செகாவத், அர்ஜூன் ராம்மேக்வால், ஸ்ரீபாத் நாயக், கைலாஷ் சவுத்திரி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு உள்ளனர்.

மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story