வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய மர்ம ஆசாமிகள் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை


வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய மர்ம ஆசாமிகள் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2020 3:19 AM GMT (Updated: 28 Oct 2020 3:19 AM GMT)

வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடிய மர்ம ஆசாமிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

காரைக்கால், 

நாகை மாவட்டம் கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து கொக்கு, மடையான், நாரை போன்ற பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருவது வழக்கம். அந்த வகையில் காரைக்கால் கடற்கரையோரம் அலையாத்தி காடுகள் மற்றும் கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகிய பகுதிகளுக்கும் வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வந்து செல்லும்.

இந்த பறவைகளை மர்ம ஆசாமிகள் வேட்டையாடி இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர். இதனை அறிந்த மாவட்ட வனத்துறை பறவைகளை வேட்டையாடினால் கைது செய்து ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

கடும் நடவடிக்கை

இந்தநிலையில் காரைக்கால் கருக்களாச்சேரி, அம்மன்கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக காரைக்கால் வனத்துறை அதிகாரி கந்தமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அதிகாரிகளை பார்த்ததும் வேட்டையாடிய பறவைகள் மற்றும் வலைகளை வயல்வெளிகளில் வீசி எறிந்து விட்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வயல்வெளியில் வீசப்பட்ட 66 மடையான், கொக்கு உள்ளிட்ட பறவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து காரைக்கால் கடற்கரையோரம் உள்ள அலையாத்தி காடுகளில் பறக்கவிட்டனர். பறவைகள் வேட்டையாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி வேட்டையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

Next Story