ஜேடர்பாளையம் அருகே கணவன், மனைவி விஷம்குடித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பரமத்திவேலூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ராம்பூர் அருகே தீபபாரா பகுதியை சேர்ந்தவர் பரசுராம் மகன் டண்ங் தர்பிசி (வயது 24). இவரது மனைவி ஜமுனா பிசி (26). இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் (23) என்பவர் மூலம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டண்ங் தர்பிசி, ஜமுனா பிசி உள்பட 12 பேர் வேலை தேடி நாமக்கல் மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அந்த ஆலை அருகில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு டண்ங் தர்பிசி மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த ஜமுனா பிசி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதை பார்த்த டண்ங் தர்பிசியும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி டண்ங் தர்பிசியும், ஜமுனா பிசியும் இறந்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story