தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் - திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை
திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
மனுதர்ம நூலை பற்றியும், இந்து பெண்களையும், கலாசாரத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்தும், அவருக்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க.வை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வலியுறுத்தியும் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. மகளிரணி, பட்டியல் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிரணி தலைவர்கள் பூமிசெல்வி(தெற்கு), ராஜேஸ்வரி(வடக்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெய்சதீஷ், துரைமுருகன், மாவட்ட செயலாளர் முரளிதரன், மாநகர தலைவர்கள் வெங்கடேஷ், கண்ணன், மாநகர பொதுச் செயலாளர் வக்கீல் சந்திரபோஸ், மகளிரணி மாவட்ட துணைத் தலைவர்கள் ஜீவஜோதி, பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நிர்வாகிகள் சிலர், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருமாவளவன் எம்.பி. பாரத தேசத்து பெண்களையும், நமது கலாசாரத்தையும் தொடர்ந்து இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். இதிகாசங்களில் கூறி இருப்பதாக தவறான விளக்கத்தை பொதுமக்களிடம் கூறி வருகிறார். இதனால் அவர் சமுதாய, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆகையால் தொல்.திருமாவளவன் எம்.பி. மீது கலெக்டர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனு கொடுக்க வருவதாக வந்த தகவலால் இரு கட்சியினருக்கும் இடையே பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பிறகே அனுமதி அளித்தனர்.
Related Tags :
Next Story