திருமாவளவன் மீதான வழக்கை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 74 பேர் கைது
தொல்.திருமாவளவன் மீதான வழக்கை திரும்ப பெறக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி தஞ்சை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்றுகாலை ஒன்று கூடினர். இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து, பா.ஜ.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடப்பதால் கலெக்டரிடம் மனு கொடுக்க தற்போது அனுமதி கொடுக்க முடியாது என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு நாங்கள் செல்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் மனு அளிக்க அனுமதி அளிக்கப்படாததுடன், அனைவரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் சொக்காரவி தலைமை தாங்கினார். சட்டசபை தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, நில உரிமை மீட்பு மாநில துணைச் செயலாளர் வீரன் வெற்றிவேந்தன், மண்டல செயலாளர் விவேகானந்தன், தெற்கு மாவட்ட செயலாளர் கோட்டை அரசமாணிக்கம் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், தொல்.திருமாவளவன் எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது சட்டத்திற்கு புறம்பானது. தொல்.திருமாவளவன் 40 நிமிடம் பேசிய பேச்சை 40 நொடி உரையாடலை மட்டும் வெட்டியும், ஒட்டியும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். திருமாவளவன் மீது உள்நோக்கத்துடன், உண்மையை மறைத்து, திரித்து சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும், தனிமனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த பொய் புகார் அளித்த பா.ஜ.க. வக்கீல் அணி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உடனே மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்தநிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தபோது திருவோணம் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைகளில் கொடிகளை ஏந்தியபடி கோஷங்கள் போட்டவாறு கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். 2 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story