அரிமளம் அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது


அரிமளம் அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 4:30 PM IST (Updated: 28 Oct 2020 4:24 PM IST)
t-max-icont-min-icon

அரிமளம் அருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 15 வீடுகள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தை அடுத்த கே.புதுப்பட்டி அருகே கீழாநிலைக்கோட்டை ஸ்ரீராம் நகரில் வெடி தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி, வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அதன் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு தொழிற்சாலை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

எனினும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வந்து, இந்த தொழிற்சாலையில் பதுக்கி வைத்து, அனுமதியின்றி வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி இந்த தொழிற்சாலையில் பட்டாசுகளையும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு சிறிய ரக பட்டாசுகள், வாணவெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கு தயாரிக்கப்பட்ட வெடிகளை அருகில் உள்ள தரை மட்ட கிணற்றில் பதுக்கி வைத்திருந்தனர். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்தன. அப்போது, அங்கு ஏராளமான வெடிகள் இருந்ததால் ‘டமார்’, ‘டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்தன. வெடித்த வேகத்தில் தரைமட்ட கிணற்றில் சுற்றி கட்டப்பட்டிருந்த கருங்கற்கள் நீண்ட தூரம் தூக்கி வீசப்பட்டன.

இந்த கற்கள் அருகே உள்ள 15-க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகள் மீது விழுந்ததில் ஓடுகள் உடைந்தன. இதனால் 15 வீடுகள் சேதமடைந்தன. மேலும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கட்டிடத்தின் ஆஸ்பெட்டாஸ் சீட் முழுமையாக சேதம் அடைந்தது. வெடி, வெடித்தபோது சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சத்தம் கேட்டது. இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் வீட்டிற்குள் இருந்ததால் காயம் இன்றி தப்பினர். இந்த வெடிவிபத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை.

வெடிகளை பதுக்கி வைத்தது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன்கள் வீரப்பன் (வயது 30), விஜயகுமார் (25), விக்னேஸ்வரன் (23), அண்ணாமலை (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story