ரெட்டியார்சத்திரம் அருகே பரபரப்பு: காவி சாயம் பூசி பெரியார் சிலை அவமதிப்பு
ரெட்டியார்சத்திரம் அருகே, காவி சாயம் பூசி பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னிவாடி,
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சமத்துவபுரம் உள்ளது. அங்கு பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் சரக்கு வேனில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள், பெரியார் சிலைக்கு காவி சாயத்தை பூசி அவமதிப்பு செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எம்.ஏ. அங்கு விரைந்து வந்தார். பின்னர் போலீசாரிடம், பெரியார் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை அகற்றி, கருப்பு நிற வர்ணம் பூசப்பட்டது.
பின்னர் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் ரெட்டியார்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story