சத்துவாச்சாரியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு - வடமாநில வாலிபர்கள் கைவரிசை


சத்துவாச்சாரியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு - வடமாநில வாலிபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 28 Oct 2020 6:15 PM IST (Updated: 28 Oct 2020 6:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் கடையின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிய வடமாநில வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

வேலூர்,

வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெள்ளி நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்துவிட்டு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். நேற்று காலை கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட வணிக வளாக உரிமையாளர் செல்போனில் மதன்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வந்து கடை ஷட்டரை திறந்து உள்ளே சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு, மதன்குமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகை மாதிரிகளை சேகரித்தனர்.

அந்த கடையின் உள்ளே மற்றும் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இருந்த பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர் அதில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 2 வடமாநில வாலிபர்கள் கடை ஷட்டரின் பூட்டை உடைக்கும் காட்சியும், பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து செல்போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் வெள்ளிப்பொருட்களை திருடுவதும் பதிவாகியிருந்தன. 2 பேரும் முககவசமோ, முகமூடியோ அணியவில்லை. ஒருவன் மட்டும் தலையில் துண்டு கட்டியிருந்தான். வடமாநில வாலிபர்களின் உருவம் தெளிவாக வீடியோவில் தெரிந்தது.

திருட்டு போன வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.70 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கடையின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்ற வடமாநில வாலிபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story