மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள்-பா.ஜ.க.வினர் மோதல் - சட்டை கிழிப்பு; 40 பேர் கைது


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள்-பா.ஜ.க.வினர் மோதல் - சட்டை கிழிப்பு; 40 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 6:30 PM IST (Updated: 28 Oct 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள்- பா.ஜனதா கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதில் சட்டை கிழிக்கப்பட்டது. 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

இந்து பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கினை ரத்து செய்ய வலியுறுத்தி அந்த கட்சியினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தின் போது அவர்கள் தமிழக அரசு மற்றும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு பா.ஜனதா கட்சியை சேர்ந்த மதுரை மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் ஆனந்த ஜெயம், துணை தலைவர் தங்கம் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் தங்கள் கட்சியின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அங்கு வந்திருந்தனர்.

பா.ஜனதா கட்சியினரை கண்டதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கோஷத்தை பலமாக எழுப்பினர். அவர்களுக்கு பதிலடியாக பா.ஜனதா கட்சியினரும் கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் இருகட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டனர். அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்களை எச்சரித்தப்படி இருந்தனர்.

இந்த நிலையில் சிலர் வேகமாக சென்று பா.ஜனதா கட்சி நிர்வாகிகளை தாக்கினர். இந்த சம்பவத்தால் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளின் சட்டை கிழிந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது. உடனே போலீசார், மோதலை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த பா.ஜனதா நிர்வாகிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 40 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையில் பா.ஜனதா நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து ஏராளமான பா.ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர்.

போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story