கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் ; ஒருவர் காயம் - பரவி வரும் வீடியோவால் பரபரப்பு
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக பரவி வரும் வீடியோவாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கையில் இருந்து 5 ரோந்து கப்பல்களில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வேகமாக வந்தனர். திடீரென ராமேசுவரம் மீனவர்கள் சிலரின் வலைகளை வெட்டி கடலில் வீசினர். எனவே இலங்கை கடற்படைக்கு பயந்து அந்த பகுதியில் இருந்து மீனவர்கள் ராமேசுவரம் பகுதியை நோக்கி புறப்பட்டனர். சிறிது நேரத்தில் இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல்கள் அங்கிருந்து திரும்பி சென்ற பின்னர், கடலில் வீசப்பட்ட மற்ற வலைகள் மற்றும் மடி பலகைகளை எடுப்பதற்காக ஒரு சில படகுகள் அந்த பகுதிக்கு மீண்டும் சென்றுள்ளன. அப்போது கடலில் வேகமாக செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டரில் வந்த இலங்கை கடற்படையினர், திடீரென ராமேசுவரம் படகுகளின் மீது கண்ணாடி பாட்டில், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ராமேசுவரத்தில் இருந்து பூண்டிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றிருந்த சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருடன் படகில் இருந்த மற்ற மீனவர்கள் வேகமாக கரையை நோக்கி வந்தனர்.
நேற்று அதிகாலையில் சுரேசை கரைக்கு கொண்டு வந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் மீனவர் சுரேஷ், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் சுரேசிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- நான் கடலுக்கு சென்ற விசைப்படகில் மொத்தம் 7 பேர் இருந்தோம். இலங்கை கடற்படைக்கு பயந்து வலைகளை எடுக்கச் சென்ற போது, 7 வாட்டர் ஸ்கூட்டர்களில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென எங்கள் படகின் மீது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலில் எனது வலது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நடுக்கடலில் ஒரு விசைப்படகில் உள்ள மீனவர்கள் மீது, பி-212 என்று எழுதப்பட்ட ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், கற்கள் வீசி தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவானது தற்போது பரவி வருகிறது. ராமேசுவரம் மீனவர்கள், உளவுப்பிரிவு போலீஸ் மற்றும் பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களில் அந்த வீடியோவானது பரவி வருகிறது. ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்துவது போன்ற அந்த வீடியோ தற்போது நடந்த சம்பவமா அல்லது முன்பு நடந்த சம்பவமா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையால், நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story