மங்களூருவில் வேளாண்மை பணிக்காக சரக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட 85 டிராக்டர்கள், 20 லாரிகள்


மங்களூருவில் வேளாண்மை பணிக்காக சரக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட 85 டிராக்டர்கள், 20 லாரிகள்
x
தினத்தந்தி 28 Oct 2020 8:30 PM IST (Updated: 28 Oct 2020 8:09 PM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் வேளாண்மை பணிக்காக 85 டிராக்டர்களும், 20 லாரிகளும் சரக்கு ரெயிலில் கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு,

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆண்டுதோறும் வேளாண்மை பணிக்காக தமிழகத்தில் இருந்து டிராக்டர்கள், லாரிகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாகனங்கள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் வாகனங்களையும் சரக்கு ரெயில்களில் ஏற்றி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் புதிய திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி லாரிகள், டிராக்டர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் ரிக் லாரிகளையும் சரக்கு ரெயிலில் ஏற்றி கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து வேளாண்மை கருவிகளை சரக்கு ரெயிலில் ஏற்றி மங்களூருவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 85 டிராக்டர்களும், 20 லாரிகளும் சரக்கு ரெயிலில் ஏற்றி கட்டப்பட்டது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு ஈரோட்டை வந்தடைந்தது. பின்னர் ஈரோட்டில் இருந்து அந்த ரெயில் மங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது. சாலை மார்க்கமாக டிராக்டர்கள், லாரிகளை கொண்டு செல்லும்போது எரிபொருள் செலவும், தேய்மானமும் அதிகமாக உள்ளது. சரக்கு ரெயிலில் கொண்டு சென்றபோது அந்த செலவு குறைகிறது என்றும், ஒரு டிராக்டருக்கு வாடகையாக ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story