தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்து விட்டது - கோவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்து விட்டது - கோவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 Oct 2020 9:00 PM IST (Updated: 28 Oct 2020 8:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துவிட்டது என்று தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கோவை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து கோவை நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டிகளை எந்த அமைப்பினர் ஒட்டினர் என்று குறிப்பிடப்படாமல் இருந்தது. அந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று கூறி குனியமுத்தூர் உள்பட பல போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர். மேலும் தி.மு.க. இளைஞர் அணியினர் பல இடங்களில் சுவரொட்டிகளை கிழித்தனர். அதை தடுக்க முயன்றவர்களை தி.மு.க.வினர் மிரட்டியதாக கூறி போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை கிழித்த தி.மு.க.வினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டியவர்கள் தங்கள் பெயரை குறிப்பிடுவதற்கு தைரியம் இல்லாமல் உள்ள னர். எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை. மிசாவை பார்த்த இயக்கம் தி.மு.க. அதனால் ஸ்டாலினை பார்த்தால் அவ்வளவு பயம். நீட் தேர்வு, இடஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் தமிழகத்தின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு பறிகொடுத்து விட்டது. நீட்தேர்வு அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் கவர்னருக்கு கடிதம் எழுதினால், கவர்னர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார். இதில் இருந்தே தெரிகிறது அடுத்த ஆட்சி தி.மு.க. என்பது.

நாடாளுமன்ற தேர்தலில் எப்படி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றோமோ, அதேபோல் வருகின்ற சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம். அவதூறு சுவரொட்டி ஒட்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. இளைஞர் அணியினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் அடுத்ததாக குனியமுத்தூர் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., பையாகவுண்டர், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, வக்கீல் அருள்மொழி, கணபதி பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார், மாரிச்செல்வம், காளப்பட்டி பொன்னுசாமி, எஸ்.எஸ்.குளம் பார் த்திபன், கீரணத்தம் ராசு, ரத்தினபுரி செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் ஆர்ப்பாட்டத்தையொட்டி பாதுகாப்புக் காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள சுண்டக்காமுத்தூர் குளத்தை ஆக் கிரமித்து கான்கிரீட் கலவை தயாரிக்கும் மையம் அமைக் கப்பட்டு இருப்பதை உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

Next Story