தசரா திருவிழா நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


தசரா திருவிழா நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 29 Oct 2020 4:00 AM IST (Updated: 29 Oct 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி, 12 நாட்கள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் நடந்தது. 11-ம் திருநாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு காப்பு களையப்பட்டதும், விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களிலேயே தங்களது காப்புகளை களைந்து விரதத்தை நிறைவேற்றினர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவின் முக்கிய திருநாட்களான 1, 10, 11 ஆகிய நாட்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரையிலும் தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தசரா திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை 6 மணி நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

நேற்று கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வேடம் அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்களும் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story