2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு - கண்காணிப்பு குழு கூட்டத்தில் தகவல்


2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு - கண்காணிப்பு குழு கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 29 Oct 2020 4:30 AM IST (Updated: 29 Oct 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கண்காணிப்பு குழு கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக திட்டங்களை ஆய்வு செய்வதற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் இந்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய நீர்வடி பகுதி மேலாண்மை திட்டம், துரிதபடுத்தப்பட்ட ஊரக குடிநீர் திட்டம், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், முழு சுகாதார இயக்கம், தேசிய சமூக உதவி திட்டங்கள் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. பேசியதாவது:-

அரசு விழாக்களில் எம்.பி.களை அழைக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற அரசு விழாக்களில் எம்.பி.க்களை அழைப்பதில்லை. நெல்லை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.2½ கோடி வந்துள்ளது. இதில் ரூ.1½ கோடி மதிப்பிலான பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. துரிதப்படுத்தப்பட ஊரக குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மகளிர் திட்ட இயக்குனர் அந்தோணி பெர்ணாண்டோ, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை, கண்காணிப்புக்குழு நியமன உறுப்பினர்கள் திருமாறன், பெர்சியாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story