ஆசிரியர்-பட்டதாரிகள் வாக்களித்தனர் கர்நாடக மேல்-சபை தேர்தலில் 71 சதவீத ஓட்டுப்பதிவு 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது


ஆசிரியர்-பட்டதாரிகள் வாக்களித்தனர் கர்நாடக மேல்-சபை தேர்தலில் 71 சதவீத ஓட்டுப்பதிவு 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது
x
தினத்தந்தி 29 Oct 2020 5:30 AM IST (Updated: 29 Oct 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்-சபை தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆசிரியர்களும், பட்டதாரிகளும் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டுப்போட்டனர். வருகிற 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்கள் ஆர்.சவுடாரெட்டி தூப்பள்ளி, எஸ்.வி.சங்கனூர், சரணப்பா மத்தூர், புட்டண்ணா ஆகியோரின் பதவி காலம் நிறைவடைந்தது.

இதையடுத்து கர்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள், கர்நாடக மேற்கு பட்டதாரிகள், பெங்களூரு ஆசிரியர்கள், கர்நாடக வடகிழக்கு ஆசிரியர்கள் ஆகிய 4 தொகுதிகள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் காரணமாக அந்த 4 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள அந்த 4 தொகுதிகளுக்கும் 28-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 9-ந் தேதி அறிவித்தது. இதில் 4 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் மேல்-சபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 549 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகள் அமைந்திருந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கர்நாடக மேல்-சபையை பொறுத்தவரையில் ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக உள்ளது.

அங்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் மேலவை தலைவர் பதவியை காங்கிரசும், துணைத்தலைவர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொண்டுள்ளன. இதன் காரணமாக முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலையில் ஆளும் கட்சி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் அரசு கொண்டு வந்த வேளாண் மற்றும் தொழிலாளர் மசோதாக்கள் மேல்-சபையில் நிறைவேற்றப்படவில்லை.

இது அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால் இந்த மேல்-சபை தேர்தலில் 4 இடங்களையும் கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்து செயல்பட்டுள்ளது. 75 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில் தற்போது காங்கிரசுக்கு 28 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 27 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 14 பேரும், மேலவை தலைவர் ஒருவரும், சுயேச்சை ஒருவரும் உள்ளனர். 4 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story