மாத்தூரில் தி.மு.க. பிரமுகர் கொலை: கைது செய்யப்பட்ட 12 பேர் சிறையில் அடைப்பு


மாத்தூரில் தி.மு.க. பிரமுகர் கொலை: கைது செய்யப்பட்ட 12 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Oct 2020 12:17 AM GMT (Updated: 2020-10-29T05:47:42+05:30)

மாத்தூரில், தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள், தொழில் போட்டி காரணமாக தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆவூர், 

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாத்தூரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் பாலசந்தர்(வயது 38). மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்த இவர், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

இவருக்கும், ராப்பூசலை சேர்ந்த பழனியாண்டி மகன்கள் பாலு என்கிற பாலமுத்து, முருகானந்தம் ஆகியோருக்கும் தொழில் போட்டி மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. பாலசந்தருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவரை மாத்தூரில், ஆவூர் ரோட்டில் உள்ள அவரது தோட்டத்து மாட்டுக் கொட்டகையில் வைத்து கடந்த 24-ந் தேதி மாலை 2 காரில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

கைது

இந்த கொலை குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்ரமணியன் மேற்பார்வையில், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை தொடர்பாக மாத்தூரை சேர்ந்த சக்திவேல் என்பவரை திருச்சி அரியமங்கலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாலமுத்து (44), முருகானந்தம் (52), சேகர் (47), முருகானந்தம் மகன் நீலமணிகண்டன் (24), சேகர் மகன் விக்கி என்கிற விக்னேஷ்(22), பாலமுத்துவின் மைத்துனர் பூலாங்குடியை சேர்ந்த பாலாஜி (29), குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த சேக்அப்துல்லா (39), மாத்தூரை சேர்ந்த முகமது இசாக் (28), ஜெயப்பிரகாஷ் (30), சதீஷ்குமார்(34), நந்தகுமார் (27) ஆகிய 11 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 கார்கள், அரிவாள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

வாக்குமூலம்

இந்த கொலை குறித்து போலீசாரிடம் பாலமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாங்களும், பாலசந்தரும் ரியல் எஸ்டேட் உள்பட பல தொழில்களை செய்து வந்தோம். ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து மூலம் பாலசந்தருக்கு கோடி, கோடியாக பணமும், சொத்தும் குவிய தொடங்கியது. இதனால், எங்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்தது.

மேலும், எங்களை அடிக்கடி பாலசந்தர் போலீசில் சிக்க வைத்தார். இதனால், எங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. பாலசந்தர் எங்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆகவே, நாங்கள் முந்திக் கொண்டு அவரை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

பின்னர், கைது செய்யப்பட்ட 12 பேரும் நேற்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்பேரில், திருமயம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story