கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் கைது
கடன் வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் சார்பில் தனி நபர் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதை நம்பி ஏராளமானவர்கள் கடன் பெறுவதற்கு அந்த நிதி நிறுவனத்தை நாடினார்கள். அப்போது ஆவணம் தயார் செய்வதற்கு தலா ரூ.1,250 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், கடன் வாங்கி கொடுத்தால் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்றும் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. மேலும், நிறுவனத்தை சேர்ந்தவர்களும் தலைமறைவாகினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பலர் தங்களது பணத்தை மீட்டு கொடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
2 பேர் கைது
அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற வேதகிரி (வயது 38), தஞ்சாவூர் வடக்கு வாசல் மேல்வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் (36) உள்பட 3 பேர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்ததும், அவர்கள் சுமார் ரூ.40 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வெங்கடேஷ், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story