சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் எம்.பி.க்கள் பங்கேற்பு


சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் எம்.பி.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Oct 2020 11:10 AM IST (Updated: 29 Oct 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு, 

தூய்மை பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கூலியை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தூய்மை பணியாளர்கள் பலர் சம்பத்நகர் பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஊதிய உயர்வு

தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 66 ஆயிரத்து 130 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.100 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் மாதத்துக்கு ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூலி உயர்வு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.

இந்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்தக்கோரி பல முறை கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோரிக்கை மனு

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு எம்.பி.க்கள் மற்றும் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story