சூளகிரியில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
சூளகிரியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
சூளகிரி ஒன்றியம் தோரிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொத்தகோட்டா கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக கடும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கிராமமக்கள் விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கொத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சூளகிரியில், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பழைய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தாசில்தார் பூவிதன் மற்றும் அலுவலர்கள், போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நீண்ட விவாதத்திற்கு பிறகு, சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து, பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டனர். பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story