சேந்தமங்கலம் அருகே, மோட்டார்சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி


சேந்தமங்கலம் அருகே, மோட்டார்சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2020 3:15 PM IST (Updated: 29 Oct 2020 3:10 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலியானார்.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 33). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் பேளுக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் சரவணகுமார் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய மலைவேப்பன்குட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சரவணகுமாருக்கு நதியா (31) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story