மதக்கலவரங்களை உருவாக்கும் முயற்சி ஒருநாளும் பலிக்காது மிலாதுநபி வாழ்த்து செய்தியில் நாராயணசாமி உறுதி


மதக்கலவரங்களை உருவாக்கும் முயற்சி ஒருநாளும் பலிக்காது மிலாதுநபி வாழ்த்து செய்தியில் நாராயணசாமி உறுதி
x

இந்திய நாட்டில் மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கும் முயற்சி ஒருநாளும் பலிக்காது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

மிலாதுநபி பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இறைத் தூதராம் நபிகள் நாயகம் இந்த மண்ணில் அவதரித்த திருநாளாம் மிலாதுநபி உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இஸ்லாம் எனும் இறைமார்க்கத்தினை அகிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு சேர்த்த நபிகள் நாயகம், அவற்றின் வழி வாழ்ந்து காட்டினார் என்பது அவரின் தனிச்சிறப்பு.

அன்பு, இரக்கம், தியாகம், கொடை என பல மனிதநேய தத்துவங்களை அவர் உலகிற்கு போதித்தார். யார் பூமியில் இருப்பவர்களுக்கு கருணை காட்டுகிறார்களோ அவர்களுக்கு விண்ணுலகில் கருணை காட்டப்படும் என்று நபிகள் நாயகம் கூறியிருப்பதை நினைவில் கொண்டு சக மனிதர்களிடையே நேசத்துடனும் கருணையுடனும் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசு சிறுபான்மை சமுதாயத்தின் பாதுகாவலனாக விளங்கி வருவது அனைவரும் அறிந்ததே. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் வழியாக சிறுபான்மையினருக்கு இன்னல்தர நினைத்தபோது அதனை எதிர்த்து புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை தடுத்து நிறுத்தினோம். இஸ்லாமியர்கள் தங்களின் முக்கிய கடமையான ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக மத்திய அரசு வழங்கிய நிதியுதவி நிறுத்தப்பட்டபோதும், புதுச்சேரி அரசு அதை முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு நிதியுதவி வழங்குவதை வக்பு வாரியத்தின் ஒரு திட்டமாக அறிவித்திருக்கிறோம். இனி வருடாவருடம் இந்த நிதியுதவி தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும்.

சிறுபான்மையினரின் நன்மைக்காக எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும். இந்திய நாட்டின் இறையாண்மையை காக்க இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்ற மதத்தினரோடு இணைந்து உயிர்த்தியாகம் செய்திருப்பதை இந்த தருணத்தில் நாம் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்கள் பங்கு அளப்பரியது. ஆனால் சில சக்திகள் இந்திய நாட்டை மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி மதக்கலவரங்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். அது ஒரு நாளும் பலிக்காது. புதுவை மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு எனது மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story