மருத்துவப் படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரம்: அரசாணை வெளியிட்டதில் குளறுபடி நடந்து விடக் கூடாது தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்


மருத்துவப் படிப்பு உள்ஒதுக்கீடு விவகாரம்: அரசாணை வெளியிட்டதில் குளறுபடி நடந்து விடக் கூடாது தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Oct 2020 5:15 AM IST (Updated: 30 Oct 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதில் குளறுபடி நடந்து விடக் கூடாது என தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. சந்தித்தார். அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

அப்போது ரவிக்குமார் எம்.பி., புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு முடிந்தபின் நிருபர்களிடம் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:-

தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் கிடந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 20-ந் தேதி அரசாணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தற்போது கோரிக்கை நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசாணையில் குளறுபடி நடந்துவிடக் கூடாது. உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதைபோல் தமிழகத்திலும் 7.5 சதவீதத்தை 10 சதவீதமாக திருத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

நவம்பர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வேல் யாத்திரை என்கிற பெயரில் வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு தினமாகும். எனவே இதில் சதிதிட்டம் உள்ளது. இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

என் மீது பொய் புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (நாளை சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. மழை காரணமாக சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் மிலாது நபி வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story