ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு


ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2020 7:03 AM IST (Updated: 30 Oct 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ். கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கலாமேரி. இந்த தம்பதியினரின் 2-வது மகன் சுஜித் வில்சன்(வயது 2). கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுஜித் எதிர்பாராத விதமாக அவர்களது ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

கடும் போராட்டத்திற்கு பிறகு அக்டோபர் 29-ந் தேதி அதிகாலை அழுகிய நிலையில் அவன் பிணமாக மீட்கப்பட்டான். அதன் பின்னர் அவனது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாத்திமாபுதூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கிராம மக்கள் அஞ்சலி

சிறுவன் சுஜித் இறந்து நேற்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து அவர்களது குடும்பத்தினர் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி சிறுவன் வீட்டில் பங்குத் தந்தை சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்ட பின்னர் சிறுவனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று அங்கும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் மறைந்த சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றியும், ஊதுபத்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

நீங்காத பாரம்

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி மாலை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று அனைவரும் பிரார்த்தனை செய்ய, அதற்கான அத்தனை முயற்சிகளும் அரசு மேற்கொண்டது. இருப்பினும் 29-ந் தேதி சுஜித் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதை அறிந்து மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர். மனதில் நீங்காத பாரமாய் அமைந்த அந்த சம்பவம் இன்று வரை மணப்பாறை மற்றும் சுற்று வட்டவார பகுதி மக்களின் நெஞ்சோடு தான் நீங்காமல் இருக்கிறது.

Next Story