பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றும் திட்டம்: கிராமப்புறங்களுக்கு எட்டா கனியாகும் ரெயில் சேவை


பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றும் திட்டம்: கிராமப்புறங்களுக்கு எட்டா கனியாகும் ரெயில் சேவை
x
தினத்தந்தி 30 Oct 2020 7:18 AM IST (Updated: 30 Oct 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றும் திட்டத்தால் கிராமப்புறங்களுக்கு ரெயில் சேவை எட்டா கனியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி, 

இந்திய ரெயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட 200 கிலோ மீட்டருக்கு மேல் இயங்கும் பயணிகள் ரெயில்கள் கண்டறியப்பட்டு, அவை எக்ஸ்பிரஸ்களாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளன.

அந்தவகையில் 36 பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்பட உள்ளன. இதற்கான புதிய கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றப்படுவதன் மூலம் ரெயில்களின் வேகம் அதிகரிப்பதோடு, விரைவாக செல்ல முடியும்.

16 ஜோடி ரெயில்கள்

ஆனால் பல்வேறு ரெயில் நிறுத்தங்கள் தவிர்க்கக்கூடும். இதனால் கிராமங்கள் உடனான ரெயில் தொடர்பு துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எக்ஸ்பிரஸ்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள ரெயில்களின் பட்டியலில் விழுப்புரம்- மதுரை, மயிலாடுதுறை- திண்டுக்கல், ஈரோடு- நெல்லை, திருச்சி- ராமேசுவரம், திருப்பதி- புதுச்சேரி, விழுப்புரம்- திருப்பதி, அரக்கோணம்- சேலம், கோவை- நாகர்கோவில், கோவை- மங்களூர் சென்ட்ரல், மதுரை- புனலூர், பாலக்காடு டவுன்- திருச்சி, பாலக்காடு- திருச்செந்தூர், கண்ணூர்- கோவை உள்பட 16 ஜோடி பயணிகள் ரெயில்கள் அடங்கும்.

இதுதவிர 4 ஒற்றை சேவை ரெயில்களும் உள்ளன. பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ் ஆக மாற்றுவதால் கட்டணம் அதிகரிக்கும். மேலும், பல சிறிய ரெயில் நிலையங்களில் அவை நிறுத்தப்படமாட்டாது. இதனால் பல கிராமங்களில் ரெயில் போக்குவரத்து இணைப்பை இழக்கும் நிலை ஏற்படும்.

23 ரெயில் நிறுத்தங்கள்

பயணச்சீட்டு கட்டணமும் 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கும். வழக்கமாக பயணிகள் ரெயிலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக உள்ளது. தற்போது இந்த மாற்றத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ.35 முதல் ரூ.40 வரை அதிகரிக்கும். இது தவிர முன்பதிவு மற்றும் பிற கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும். இதில் திருச்சி- ராமேஸ்வரம் பயணிகள் ரெயில் பல ஆண்டுகளாக ரெயில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து மத்திய மாவட்டங்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரெயிலில் தான் பயணம் செய்வதுண்டு. திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரெயில் தினமும் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்பட முக்கிய வழித்தடங்கள் வழியாக ராமேசுவரத்தை சென்றடைகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள சிறு, சிறு கிராமங்கள் உள்பட மொத்தம் 23 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

மாணவ-

மாணவிகளுக்கு பாதிப்பு

தற்போது இந்த ரெயில் எக்ஸ்பிரஸ்களாக மாற்றப்படுவதால் கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க கூடிய சூழ்நிலை ஏற்படும். திருச்சி-ராமேசுவரம் வழித்தடத்தில் உள்ள சிறிய ஊர்களில் இருந்து தினசரி பிழைப்புக்காக திருச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு வரும் ரெயில் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், “பயணிகள் ரெயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றுவதால் அன்றாட பிழைப்புக்கு செல்பவர்களும், படிப்பதற்காக திருச்சி போன்ற பெரு நகரங்களை நோக்கி வரும் கிராமப்புற கல்லூரி மாணவ- மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள். குக்கிராமங்களில் இருந்து தற்போது வரை பலரும் ரெயில் பயணத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இனி அவர்களுக்கு ரெயில் சேவை எட்டா கனியாக மாறி விடும். அதிக கட்டணம் செலுத்தி பஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.” என்றார்.

Next Story