டிசம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு பல்லாரி வெங்காயம் விலை குறைய வாய்ப்பு வியாபாரிகள் தகவல்


டிசம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு பல்லாரி வெங்காயம் விலை குறைய வாய்ப்பு வியாபாரிகள் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2020 2:30 AM GMT (Updated: 30 Oct 2020 2:30 AM GMT)

பல்லாரி வெங்காயம் விலை டிசம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு குறைய வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, 

விளைச்சல் இல்லாமல் வரத்து குறைந்ததால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக பல்லாரி வெங்காயம் விலை உயர்ந்து இருக்கிறது. மொத்த மார்க்கெட்டுகளில் ரூ.70 வரை விற்கபட்டாலும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில் பல்லாரி வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இருப்பினும் எப்போது மொத்த மார்க்கெட்டுகளில் பல்லாரி வெங்காயம் பழைய விலையில் விற்பனையாகும்? என்பது பொதுமக்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விலை எப்போது குறையும்?

இதுதொடர்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘சாதாரண நாட்களில் நாசிக், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து சுமார் 80 லாரிகளில் கொண்டுவரப்படும் பல்லாரி வெங்காயம், தற்போது விளைச்சல் குறைவு காரணமாக 40 லாரிகளில் தான் கொண்டுவரப்படுகிறது. டிசம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு, அங்கிருந்து வரத்து அதிகரிக்கும். அந்தநேரத்தில் பல்லாரி வெங்காயம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதுவரை இந்தநிலையில் தான் விற்பனை செய்யப்படும். தற்போது சென்னையில் எகிப்து வெங்காயமும், பிற மாவட்டங்களில் எகிப்து, ஈரானில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் வெங்காய தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது’ என்றனர்.

காய்கறி விலை

இதுஒருபுறம் இருக்க காய்கறி வகைகளின் விலையும் சத்தம் இல்லாமல் உயர்ந்து வருகிறது. அந்தவகையில் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் போன்றவற்றின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம்(ஒரு கிலோ) வருமாறு:-

பல்லாரி வெங்காயம்- ரூ.70, சாம்பார் வெங்காயம்- ரூ.100, தக்காளி- ரூ.20 முதல் ரூ.30 வரை, உருளைக்கிழங்கு- ரூ.35 முதல் ரூ.40 வரை, பீன்ஸ்- ரூ.60 முதல் ரூ.70 வரை, அவரைக்காய்- ரூ.50 முதல் ரூ.60 வரை, கத்தரிக்காய்- ரூ.40 முதல் ரூ.50 வரை, வெண்டைக்காய்- ரூ.20, சவ்சவ்- ரூ.10, கேரட்- ரூ.60 முதல் ரூ.80 வரை, முள்ளங்கி- ரூ.15, பீட்ரூட்- ரூ.30 முதல் ரூ.40 வரை, நூக்கல்- ரூ.15 முதல் ரூ.20 வரை, முருங்கைக்காய்- ரூ.40 முதல் ரூ.50 வரை, காலிபிளவர்- ரூ.20 முதல் ரூ.30 வரை, புடலங்காய்- ரூ.20, பீர்க்கங்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, சேனைக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20 வரை, சேப்பக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20 வரை, கொத்தவரங்காய்- ரூ.20 முதல் ரூ.25 வரை, மிளகாய்- ரூ.30, இஞ்சி- ரூ.40 முதல் ரூ.60 வரை, தேங்காய்(காய்ஒன்று)- ரூ.30, வாழைக்காய்(காய்ஒன்று)- ரூ.5 முதல் ரூ.10 வரை.

Next Story