திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நூதன முறையில் மொய் பணம் திருட்டு கேமரா பதிவு காட்சியை கொண்டு போலீசார் விசாரணை


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நூதன முறையில் மொய் பணம் திருட்டு கேமரா பதிவு காட்சியை கொண்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Oct 2020 8:50 AM IST (Updated: 30 Oct 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர் போல நடித்து மொய் பணத்தை நூதன முறையில் திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வீடியோ பதிவு காட்சியை கொண்டு தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்கோட்டை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நவீன், ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்து ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்தி அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கினர்.

மொய் பணம் திருட்டு

மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர். இரவு மணமேடை அருகே வந்த மர்ம நபர் ஒருவர் மொய் பணம் வைத்திருந்தவரிடம், உறவினர் போல நடித்து, தான் இரவு உணவு சாப்பிட்டு விட்டேன். நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்து விட்டு அன்பளிப்பு பணத்தை வாங்கி வைத்துள்ளார்.

சற்று நேரத்தில் மொய் பணம் அடங்கிய அந்த பையை நூதன முறையில் திருடிக்கொண்டு அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார். அந்த பையில் ரூ.1 லட்சம் வரை மொய் பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை கொண்டு மொய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story