தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது வட்டார கல்வி அலுவலர் பேச்சு


தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது வட்டார கல்வி அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 30 Oct 2020 9:09 AM IST (Updated: 30 Oct 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று வட்டார கல்வி அலுவலர் சம்பத் தெரிவித்தார்.

கொரடாச்சேரி, 

கொரடாச்சேரி வட்டார வளமையத்தில் வட்டார அளவிலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரபு முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளமைய பயிற்றுனர்கள் காத்தமுத்து, சண்முகப்பிரியா, கலைச்செல்வன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் எழுத்தறிவற்ற பாமரர்களை கண்டறிந்து கணக்கெடுப்பு செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

விவரங்களை சேகரிக்கும் பணியில்

பின்னர் வட்டார கல்வி அலுவலர் சம்பத் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும் எழுத்தறிவற்ற பாமரர்கள் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் ஒருசிலர் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவ்வாறு எழுத்தறிவற்றவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுத்தர அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் பள்ளி செல்லாத குழந்தைகள், குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு வராமல் உள்ள இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கல்வி அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்கான பயிற்சி தற்போது அளிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் இந்த பயிற்சியினை பெற்று தங்களது பள்ளி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள எழுதப்படிக்காத பாமரர்கள் பற்றிய விவரங்களை விரைந்து அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story