பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்


பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 30 Oct 2020 10:36 AM IST (Updated: 30 Oct 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் குறைந்த விலையில் வெங்காய விற்பனையை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு, 

கூட்டுறவு துறை சார்பில், ஈரோடு மாநகராட்சியில், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் குறைந்த விலையில் வெங்காய விற்பனை நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர், பொதுமக்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்து தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்ததாவது:-

வெங்காயம் விளையும் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் தற்போது அதிக மழை பெய்து வருவதன் காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக மழைக்காலங்களின்போது வெங்காயம் வரத்து குறையும். அதன் விளைவாக வெங்காயம் விலை உயர்வது வழக்கம். கடந்த ஆண்டு எகிப்தில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டது.

தேவைப்பட்டியல்

இந்த நிலையில், தமிழக முதல் -அமைச்சர், சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக, வெளிச்சந்தையில் நிலவும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் கூட்டுறவு சிறப்பங்காடிகள், சுயசேவை பிரிவுகள், சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்து ரூ.45-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 52 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி, 9 சுய சேவைப்பிரிவு என மொத்தம் 61 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு தேவையான வெங்காயத்தின் மொத்த அளவினை முன்கூட்டியே தேவைப்பட்டியலாக தயாரித்து, அதனை வாரந்தோறும் பிரித்து பெறவேண்டிய அளவு வாரியாக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். வெங்காயம் விற்பனை தொடர்பாக எவ்வித புகாருக்கும் இடமின்றி கூட்டுறவுத்துறையில் உள்ள மேற்கண்ட அங்காடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் ஜெகதீசன், மேலாண்மை இயக்குனர் பாண்டியன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி, மேலாண்மை இயக்குனர் பிரபு, ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story